விளையாட்டு

சின்சினாட்டி டென்னிஸ் ரோஜர் பெடரர், செரீனா சாம்பியன்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், மகளிர் ஒற்றையர் பிரிவில் உள்ளூர் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

அமெரிக்காவின் மிகவும் பழமையான டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி மாஸ்டர்ஸ் 1899-ம் ஆண்டு முதல் நடத்தப் பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த போட்டித் தொடரில் அதிகபட்சமாக 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை பெடரர் பெற்றார்.

இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் டேவிட் பெரரை பெடரர் எதிர்கொண்டார். சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெடரர் 3-வது இடத்திலும், பெரர் 5-வது இடத்திலும் உள்ளதால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமைந்தது. இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பெடரர் கைப்பற்றினார். இதையடுத்து 2-வது சுற்றில் பெரர் ஆக்ரோஷமாக விளையாடினார்.

அந்த செட் 6-1 என்ற கணக்கில் பெரரின் வசமானது. எனவே அடுத்த செட் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் பெடரரின் கை ஓங்கியது. இறுதி செட்டை 6-2 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தையும் பெடரர் கைப்பற்றினார்.

தொடர்ந்து 4 மாஸ்டர்ஸ் போட்டியில் தோல்வியைச் சந்தித்து வந்த பெடரருக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. முன்னதாக கடந்த வாரம் டோராண்டோ டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்தில் சோங்காவிடம், பெடரர் தோல்வி யடைந்தார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் விரைவில் தொடங்கவுள்ள நிலை யில் இந்த வெற்றி பெடரருக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.

மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், செர்பியா வின் அனா இவானோவிச்சை மிக எளிதாக வென்றார். வெற்றி பெற வெறும் 62 நிமிடங்களை மட்டும் செரீனா எடுத்துக் கொண்டார். 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அனா இவானோவிச்சை வீழ்த்தி செரீனா சாம்பியன் ஆனார்.

வெற்றி குறித்து கருத்து தெரிவித்த செரீனா, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் தொடங்க இருக் கிறது. எனவே இந்த வெற்றி எனக்கு சரியான நேரத்தில் கிடைத்துள் ளது. இப்போது கடினமாக பயிற்சி மேற் கொண்டு வருகிறேன் என்றார்.

அரையிறுதி ஆட்டத்தில் மரியா ஷரபோவாவை வென்ற அனா இவானோவிச், அதன் பிறகு வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டார். எனவே அவரால் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடியாமல் போனது.

SCROLL FOR NEXT