மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிப்பேன் என்று இந்திய செஸ் வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆனந்த், நேற்று சொந்த ஊரான சென்னைக்கு திரும்பினார். பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: வெற்றிக்கான புதிய பாதையை வகுத்துள்ளேன். பழைய பாதையில் சென்றால் வெற்றி கிடைக்காது என்பதாலேயே புதிய பாதைக்கு மாறியுள்ளேன்.
வெற்றிக்காக மேலும் பல உத்திகளை வகுத்துள்ளேன். அவை அனைத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்றார். நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை அடுத்த உலக சாம்பியன் போட்டியில் எதிர்த்து விளையாடும் வீரரை தேர்வு செய்வதுதான் கேன்டிடேட் செஸ் போட்டியாகும். இதில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் கார்ல்சனுடன் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மோத இருக்கிறார் ஆனந்த்.
முன்னதாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனிடம் ஆனந்த் தோல்வியடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.