விளையாட்டு

2015 உலகக் கோப்பை கிரிக்கெட்: கடுமையான பயிற்சியில் ஆப்கான் அணி வீரர்கள்

செய்திப்பிரிவு

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

2008ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் லீகில் டிவிஷன் 5-ல் இருந்த ஆப்கானிஸ்தான் அணி அந்த நிலையிலிருந்து உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதன் முதலாக தகுதி பெறும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

1980ஆம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் அங்கு ஆக்ரமிப்பு ஆட்சி செய்து கொண்டிருந்த போது, பாகிஸ்தானில் உள்ள அகதிகள் முகாமில் இருந்த இளைஞர்கள் பலர் தங்கள் கவனத்தை கிரிக்கெட் ஆட்டம் பக்கம் திருப்பினர். இன்று இரண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த அணியாகத் திகழ்கிறது ஆப்கான்.

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிலபல அதிர்ச்சிகளை அளிக்க ஆப்கான் அணி தயார் நிலையில் உள்ளதாக அதன் பயிற்சியாளர் கபீர் கான் தெரிவித்துள்ளார்.

“கடந்த மாதம் ஜிம்பாவேயிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 போட்டிகளில் தோல்வி கண்ட நாங்கள் அதன் பிறகு 2 போட்டிகளை வென்று தொடரை சமன் செய்தது உண்மையில் அணி வீரர்களை உத்வேகப்படுத்தியுள்ளது” என்றார்.

மேலும், அடுத்த மாதம் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு ஆப்கான் அணி செல்கிறது. அங்கு பல மாநில அணிகளுடன் பல போட்டிகளில் விளையாடி உலகக் கோப்பைக்கு முன்னர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தட்பவெப்பம், பிட்ச் போன்ற சூழலுக்கு வீரர்கள் தயார் படுத்திக் கொள்வார்கள் என்கிறார் அவர்.

பயிற்சியாளர் கபீர் கான், 1990ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்காக 4 டெஸ்ட் மற்றும் 10 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்.

14 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆப்கான் அணி பிரிவு ஏ-யில் உள்ளது. முதல் போட்டியில் பிப்ரவரி 18ஆம் தேதி வங்கதேச அணியைச் சந்திக்கிறது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் உள்ளன.

பிரிவு பி-யில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாவே, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், மற்றும் யு.ஏ.இ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன,

அடுத்த மாத ஆஸ்திரேலியா தொடரில் பந்துகள் எகிறும் பெர்த் பிட்சில் சில பயிற்சி ஆட்டங்களை ஆடுகிறது ஆப்கானிஸ்தான்.

SCROLL FOR NEXT