ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாணியில் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து என்ற பெயரில் இந்தியாவில் கால்பந்து லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கொலம்பிய தடுப்பாட்டக்காரர்கள் ஜெய்ரோ சுரேஜ், ஆண்ட்ரேஸ் கொன்ஸாலேஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுரேஜ் கூறுகையில், “கொலம்பிய வீரராக இந்தியாவில் கால்பந்து விளையாடவிருப்பதை கௌரவமாகக் கருதுகிறேன். எனது ஆட்டத்தின் மூலம் இங்குள்ள ரசிகர்களை மகிழ்விக்க முடியும் என நம்புகிறேன்” என்றார்.
29 வயதாகும் சுரேஜ், கொலம்பியாவில் உள்ள சன்டா ஃபெ அணிக்காக வலது பின்கள வீரராக விளையாடி வருகிறார். கொன்ஸாலேஸ் கூறுகையில், “இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த லீக் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
இந்தப் போட்டியால் கால்பந்தில் இந்தியாவின் தரம் உயரும் என கருதுகிறேன். பிரபல கால்பந்து வீரர்களிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ளவும், இளம் வீரர்களிடம் எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் காத்திருக்கிறேன்” என்றார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியை அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஆதரவுடன் ஐஎம்ஜி ரிலையன்ஸ், ஸ்டார் இந்தியா ஆகியவை இணைந்து நடத்துகின்றன.