ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் மே.இ.தீவுகள் தொடரை ஒரு முன்னோட்டமாக இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளும்போது ஏன் புஜாராவுக்குப் பதில் இன்னொரு புது வீரரை இறக்கியிருக்கக் கூடாது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
மூத்த வீரர் செதேஷ்வர் புஜாராவுக்குப் பதிலாக இன்னொரு புதிய வீரரைக் களமிறக்கியிருக்கலாம். பிரித்வி ஷாவுடன் மயங்க் அகர்வாலையும் இறக்கி ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக வலுவான ஒரு பேட்டிங் வரிசையாக மாற்றியிருக்கலாம்.
புஜாரா உள்நாட்டுத் தொடரில் வழக்கம் போல் மலையளவு ரன்களைக் குவிப்பவர்தான், அவருக்கு ஆஸ்திரேலியா தொடர் கடினமாக இருக்கும். இவர் உழைத்து ஆடுபவர், இவரைப்போய் மே.இ.தீவுகளுக்கு எதிராக ஆடவைப்பதில் இந்திய அணிக்கு என்ன பலன்?
இரண்டு புதிய வீரர்கள் வலுப்பெறுகிறார்கள் என்றால் அயல்நாடுகளில் இந்தியாவின் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆனால் ரஹானே, ராகுல் (இவர் ஓவலில் சதம் எடுத்திருந்தாலும்) ஆடியேயாக வேண்டும். இருவரும் பார்மில் இல்லை. இங்கிலாந்தில் தோற்றதற்கு பேட்டிங்தான் காரணம், ஆகவே பேட்டிங்கை வலுப்படுத்தும் வகையில் இந்தத் தொடரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சுரேக்கர்