விளையாட்டு

கோலியின் பின்னடைவும்.. கவாஸ்கரின் அறிவுரையும்

செய்திப்பிரிவு

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளார் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி. இந்திய அணியில் சச்சினின் இடத்தை நிரப்ப தகுதியானவர் என்றும், அணிக்கு தலைமை வகிக்க அனைத்து திறமைகளும் உள்ளவர் என்றும், இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பு என்றும் வர்ணிக்கப்பட்ட அவர், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இதுவரை தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை.

இங்கிலாந்தில் களமிறங்குவதற்கு முன்பு வரை டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் கிரிக்கெட் என அனைத்திலும் ரன் குவிக்கக் கூடிய திறமையுள்ள ஒரே இந்திய வீரர் என்றும் அவர் வர்ணிக்கப்பட்டு வந்தார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இங்கிலாந்தில் இதுவரை விளையாடியுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்துள்ள ரன்கள் முறையே 1, 8, 25, 0, 39, 28, 0, 7. இருமுறை ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்துள்ளார். 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறியுள்ளார்.

இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்களையும் 9 அரை சதங்களையும் எடுத்துள்ளார். இங்கிலாந்து தொடருக்கு முன்பு அவரது டெஸ்ட் சராசரி 70 ஆக இருந்தது. இப்போது 40 ஆக குறைந்துவிட்டது.

எனினும் கோலி மீதான தனது நம்பிக்கை இப்போதும் குறைந்துவிடவில்லை என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் தோனியின் மோசமான பேட்டிங் குறித்து நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள அவர், கிரிக்கெட்டில் அனைத்து வீரர்களுக்குமே கடினமான காலகட்டம் ஒன்று ஏற்படும். இது இப்போது கோலிக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் இதில் இருந்து மீண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர் சற்று கூடுதல் ஒழுக்கத்துடன், கூடுதல் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதே எனது அறிவுரை.

நான் ஒழுக்கம் என்று கூறுவது அவரது பேட்டிங்கில் மட்டும்தான். சில தவறான ஷார்ட்களை கையாளுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT