பேட்டிங் பார்மில் திணறி வரும், மந்தமாக ஆடிவரும் இந்தத் தோனியைக் கூட தான் 80வயது வரை தன் அணியில் வைத்திருப்பேன் என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தோனி ஓய்வு அறிவிக்கும் நேரம் வந்து விட்டது அல்லவா என்று டிவில்லியர்ஸிடம் கேட்டனர், அதற்குத்தான் அவர் 80வயதானாலும் என் அணியில் தோனி இருப்பார் என்று பதில் கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்காக ஏ.பி.டிவில்லியர்ஸ் கூறியதாவது:
நீங்கள் வேடிக்கை செய்கிறீர்கள். தோனி என் அணியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் ஆடுவார். அவருக்கு 80 வயதாகியிருக்கலாம், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கலாம், ஆனாலும் தோனி என் அணியில் இருப்பார்.
அவர் அபாரமான ஒரு வீரர், அவரது சாதனைகளை எடுத்துப் பாருங்கள். அவரைப்போன்ற ஒரு வீரரை அணியிலிருந்து நீக்க முடியுமா? என்ன ஆனாலும் அவர் அணியில் இருக்கத்தான் வேண்டும். நான் அவரை அணியிலிருந்து நீக்க மாட்டேன்.
இவ்வாறு கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.
இதனையடுத்து ‘தோனி ட்ரெண்ட்ஸ்’ என்பதில் தோனி ரசிகர்கள் பெரும் எழுச்சிக் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர்.
அதே போல் விராட் கோலியுடனான தனது ஐபிஎல் கூட்டணி பற்றி டிவில்லியர்ஸ் கூறும்போது, “எங்களிடையே ஒரு ரசாயனம் ஊடாடுகிறது. எங்களுக்கு ஒரேவிதமான மன நிலை உள்ளது. நாம் விளையாடும் முறையை புரிந்து கொள்ளும் ஒரு வீரருடன் ஆடுவது மகிழ்ச்சியளிக்கக் கூடியது. பரஸ்பர புரிதலும் உள்ளது. அவருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பிடிக்கும் அவர் ரொனால்டோ, நான் மெஸ்ஸி” என்றார் டிவில்லியர்ஸ்.
இந்திய வீரர்களை, குறிப்பாக ஸ்டார் வீரர்களை புகழ்வது என்பது இப்போதெல்லாம் ஐபிஎல் காரண காரியங்களுக்காக என்று ஆகிவிட்டது அதனால் எது உண்மையான புகழ்ச்சி, எது வழக்கமான பேச்சு என்பதை எளிதில் இனம் காண முடிவதில்லை.