உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம், உலக பாட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றார்.
கோபன்ஹேகனில் நடந்த அரையிறுதிச் சுற்றில், ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினிடம் 21-17, 21-15 என்ற கணக்கில் சிந்து போராடி தோல்வி கண்டார். இதனால், அவர் ஏற்கெனவே உறுதியை செய்த வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
முன்னதாக, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பி.வி.சிந்து 19 -21, 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான சீனாவின் ஷிக்ஸியான் வாங்கை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா தனது காலிறுதியில் 15-21, 15-21 என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சீனாவின் லீ ஸியூரூயிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.