விளையாட்டு

நாட்டிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி: கேரள மக்களுக்கு அர்ப்பணிப்பதாக விராட் கோலி அறிவிப்பு

செய்திப்பிரிவு

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 204 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 97, அஜிங்க்ய ரஹானே 81 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 38.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.

168 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 110 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 352 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.விராட் கோலி 103, சேதேஷ்வர் புஜாரா 72, ஹர்திக் பாண்டியா 52 ரன்கள் எடுத்தனர்.

இதையடுத்து 521 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 102 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. அடில் ரஷித் 30, ஆண்டர்சன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக கீட்டன் ஜென்னிங்ஸ் (31) அலாஸ்டர் குக் (17), கேப்டன் ஜோ ரூட் (13), ஆலிவர் போப் (16) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

62 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ், ஜாஸ்பட்லர் ஜோடி போராடியது. சுமார் 57 ஓவர்கள் தாக்குப்பிடித்து இந்த ஜோடி விளையாடியது.

ஒருவழியாக புதிய பந்தை கையில் எடுத்ததும் ஜஸ்பிரித் பும்ரா, ஜாஸ் பட்லரையும் (106), ஹர்திக் பாண்டியா தனது பங்குக்கு பென் ஸ்டோக்ஸையும் (62) வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து ஜானி பேர்ஸ்டோவ் (0), கிறிஸ் வோக்ஸ் (4), ஸ்டூவர்ட் பிராடு (20) ஆகியோரையும் பெவிலியனுக்கு திருப்பி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் பும்ரா.கடைசி நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு 6 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி விக்கெட்டை இழந்தது. ஆண்டர்சன் 11 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் 317 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடில் ரஷித் 33 ரன்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 5, இஷாந்த் சர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என பின்தங்கி உள்ளது. இரு இன்னிங்ஸிலும் சேர்த்து ஒரு சதம் உட்பட 200 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்ட நாயகனாக தேர்வானார். 4-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுத்தாம்டன் நகரில் தொடங்குகிறது.

வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், “அனைத்திற்கும் முதலாக, நாங்கள் ஓர் அணியாக இந்த வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அந்த மக்கள் பெரிய துயரத்துக்கு ஆளாகியுள்ள நிலையில், எங்களால் முடிந்தது வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிப்பதே.

தொடரை நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நாங்கள் நம்பவில்லை என்றால் இப்போது 1-2 என்று தொடர் ஆகியிருக்காது. எப்போதுமே முன்னேறிச்செல்லவும் வெற்றி பெறவும்தான் நாங்கள் விரும்புகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT