விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் விவசாயி மகன்

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான நேற்று ஆடவருக்கான துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சவுத்ரி இறுதி சுற்றில் 240.7 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சவுரப் திவாரி. அவருக்கு தற்போது 16 வயது 101 நாட்கள் ஆகிறது. இந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் தாய்லாந்து வீராங்கனை தன்யாலக் 16 வயது 14 நாட்களில் தங்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள கலினா என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் மகனான சவுரப் திவாரி, தான் பங்கேற்ற முதல் சீனியர் தொடரிலேயே மிகுந்த முதிர்ச்சியுடனும், எந்தவித பதற்றமும் இல்லாமல் விளையாடி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் டோமோ யுகி மட்சுடா, 4 முறை ஒலிம்பிக் மற்றும் 3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவின் ஜின் ஜோங் ஆகியோருக்கு கடும் சவால் கொடுத்தார் சவுரப் சவுத்ரி.

இதில் 42 வயதான டோமோ யுகி மட்சுடா 239.7 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஜின் ஜோங் 178.4 புள்ளிகள் சேர்த்து 5-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்ததது. மற்றொரு இந்திய வீரரான அபிஷேக் வர்மா 219.3 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். 29 வயதான வழக்கறிஞரான அபிஷேக் வர்மா, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர்தான் துப்பாக்கி சுடுதல் விளையாட்டை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் ஒரே பிரிவில் இந்தியா இரு பதக்கங்கள் பெறுவது இதுவே முதன்முறை.

இதற்கு முன்னர் ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் இளம் வயதில் இந்தியாவின் ஜஸ்பால் ரானா, ரன்ந்திர் சிங், ஜிது ராய், ரோன்ஜன் சோதி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றிருந்தனர். இவர்களுடன் தற்போது சவுரப் சவுத்ரி இணைந்துள்ளார். 11-ம் வகுப்பு மாணவரான சவுரப் சவுத்ரி, மீரட்டில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் பெனோலி நகரி அமைந்துள்ள அமித் ஷியோரன் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார். 3 வருடங்களுக்கு முன்னர்தான் இந்த விளையாட்டை சவுரப் சவுத்ரி தேர்வு செய்துள்ளார். வீட்டில் இருக்கும் நேரங்களில் தந்தைக்கு விவசாய பணிகளில் உதவிகள் செய்து வந்துள்ளார். இளம் வீராங்கனையான மனு பாகரை போன்று இவரும் சைவ உணவு வகை பிரியர்.

சவுரப் சவுத்ரி கூறும்போது, “போட்டியின் போது எந்தவித நெருக்கடியையும் நான் உணரவில்லை. அது எப்போதும் நமக்கு உதவாது. எனக்கு விவசாயம் மிகவும் பிடிக்கும். ஆனால் பயிற்சிகளில் ஈடுபடுவதால் விவசாயத்துக்காக அதிக நேரம் செலவிடுவதில்லை. எனினும் எப்போதெல்லாம் நான் எனது கிராமத்துக்கு திரும்பி செல்வேனோ, அந்த சமயங்களில் எனது தந்தைக்கு உதவிகள் செய்வேன்” என்றார்.

இதற்கிடையே தங்கப் பதக்கம் வென்ற சவுரப் சவுத்ரிக்கு, உ.பி.மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார்.

சஞ்ஜீவ் ராஜ்புத்துக்கு வெள்ளி பதக்கம்

ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் 37 வயதான இந்திய வீரர் சஞ்ஜீவ் ராஜ்புத் 452.7 புள்ளிகள் சேர்த்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹுய் ஸிசெங் 453.3 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், ஜப்பானின் டகாயுகி மட்சுமோடோ 441.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். போட்டியின் கடைசி பகுதியில் சஞ்ஜீவ் ராஜ்புத் 8.4 புள்ளிகளே சேர்த்தார். இதன் காரணமாகவே அவர், நூலிழையில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். முதலிடம் பிடித்த ஹுய் ஸிசெங்குக்கும், சஞ்ஜீவ் ராஜ்புத்துக்கும் இடையே 0.6 புள்ளிகள்தான் வித்தியாசமாக இருந்தது.

முன்னாள் கடற்படை வீரரான சஞ்ஜீவ் ராஜ்புத், ஆசிய விளையாட்டில் தனிநபர் பிரிவில் பதக்கம் வெல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் நடைபெற்ற 3 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் அவர், அணிகள் பிரிவில் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்ஜீவ் ராஜ்புத் மீது பாலியல் புகார் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் இந்திய விளையாட்டு ஆணையத்தில் துணை பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டிருந்தார். இதனால் அவர், தற்போது வேலை இல்லாதவராக உள்ளார். சஞ்ஜீவ் ராஜ்புத் கூறும்போது, “தற்போது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, பார்க்கலாம். இறுதி கட்டத்தில் 8.4 புள்ளிகளே சேர்த்தேன். இதுதான் தங்கப் பதக்கத்தை இழக்க காரணமாக இருந்தது” என்றார்.

SCROLL FOR NEXT