இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி, இந்தியாவில் கால்பந்தாட்டத்தை அழித்துவிடும் என கோவாவின் முன்னணி கால்பந்து கிளப்பான சர்ச்சில் பிரதர்ஸ் கிளப்பின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) வலங்கா அலமோ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பாணியில் 8 அணிகள் பங்கேற்கும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வரும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அலமோ மேலும் கூறியிருப்பதாவது: இந்தியன் சூப்பர் லீக் போட்டி இந்தியாவில் கால்பந்தாட்டத்தை அழித்துவிடும். இந்த லீக், கால்பந்து போட்டிக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போராடிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் இரு லீக் போட்டிகளை நடத்த முடியாது.
டெம்போ ஸ்போர்ட்ஸ் கிளப்போன்ற ஒரு சில கிளப்புகளைத்தவிர நாட்டில் உள்ள பெரும்பாலான கிளப்புகள் இந்த லீக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த லீக்கிற்கு எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாது. இந்த லீக்கில் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. இளம் தலைமுறை கால்பந்து வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான அடிப்படை திட்டங்கள் எதுவும் இந்த லீக்கில் இல்லை.
2017-ல் இந்தியாவில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள நிலையில் இதுபோன்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக நம்முடைய அணியை பலப்படுத்த முயற்சி எடுத்திருக்க வேண்டும். உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை தகுதிபெற வைப்பதற்கு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
முறையான திட்டமிடுதல் இருந்தால் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற முடியும் என்பதை ஜப்பான் போன்ற நாடுகள் நிரூபித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.