கொல்கத்தா: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியனான தென் ஆப்பிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 15 ஆண்டுகளில் இந்திய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணியின் முதல் வெற்றியாக இது அமைந்தது.
இந்த போட்டியில் 124 ரன்களையே இலக்காக நிர்ணயித்த போதிலும் சைமன் ஹார்மரின் சுழற்பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்க அணி வெற்றியை வசப்படுத்தி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கொல்கத்தா போட்டியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா விலா எலும்பு காயம் காரணமாக விளையாடவில்லை. எனினும் மார்கோ யான்சன், கார்பின் போஷ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு தங்களது பங்களிப்பை வழங்கினர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோவில் காகிசோ ரபாடா கூறியிருப்பதாவது: போட்டியில் விளையாடாமல் யார் வெளியே அமர்ந்திருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவதற்கான வழிகளை கண்டறிவோம். கேப்டன் தெம்பா பவுமா எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். ஆனால், அவர் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியது இல்லை. கொல்கத்தா டெஸ்டில் நான் விளையாடவில்லை. அதனால் இது ஒரு விஷயம் இல்லை.
எங்கள் அணியில் யார் களத்தில் இறங்கினாலும், அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் எய்டன் மார்க்ரம், ரியான் ரிக்கெல்டன் ஆகியோர் சிறந்த தொடக்கம் கொடுத்தனர். ஆட்டத்துக்கான தொனியை அவர்கள், அமைத்துக் கொடுத்தனர். முக்கியமான நேரங்களில் மார்கோ யான்சன், கார்பின் போஷ் சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தினார்கள்.
அணியில் உள்ள அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கினார்கள். இதுதான் இந்த அணியின் சிறப்பம்சம். இந்த சீசனில் நாங்கள் பெற்ற வெற்றிகளை வரையறை செய்து கூறுவது கடினம். ஏனெனில் சில அற்புதமான வெற்றிகளை பெற்றிருக்கிறோம். ஆனால் கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நாங்கள் பெற்ற வெற்றி டாப் 3ல் உள்ளது.
ஆட்டத்தில் நாங்கள் பின் தங்கியிருந்தோம் ஆனால் அதன் பின்னர் வழிகளை கண்டறிந்து முன்னேறினோம். ஒரு கட்டத்தில் பதற்றமாக இருந்தது. போட்டியை வெற்றிகரமாக முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு ரபாடா கூறியுள்ளார்.