கொல்கத்தா: இந்திய அணி உடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 159 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
நடப்பு டெஸ்ட் உலக சாம்பியனான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணி உடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது அந்த அணி. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை அன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணிக்காக மார்க்ரம் மற்றும் ரிக்கல்டன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். முதல் 57 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி. ரிக்கல்டன் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மார்க்ரம் 31 ரன்களில் வெளியேறினார். அவர்கள் இருவரின் விக்கெட்டையும் பும்ரா கைப்பற்றினார்.
பின்னர் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கேப்டன் பவுமா, முல்டர், டி சோர்ஸி, கைல் வெர்ரைன், யான்சன், கார்பின் போஷ், ஹார்மர், கேஷவ் மகாராஜ் ஆட்டமிழந்தனர். 54.6 ஓவர்களில் 159 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் 2, அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.
தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 13, வாஷிங்டன் சுந்தர் 6 ரன்கள் உடன் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியை காட்டிலும் இந்திய அணி 122 ரன்கள் பின்தங்கியுள்ளது.