சிட்னி: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் வரும் 21-ம் தேதி முதல் விளையாட உள்ளன. இந்த தொடரில் அனுபவமே தங்கள் பலம் என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில், 14 பேர் 30+ வயதை கடந்தவர்கள். குறிப்பாக பந்து வீச்சாளர்களான நேதன் லயன் (38), ஹேசில்வுட் (34), மிட்செல் ஸ்டார்க் (35), ஸ்காட் போலண்ட் (36) ஆகியோர் முதல் போட்டிக்கான அணியில் உள்ளனர்.
“அனுபவமே எங்கள் பிரதான பலம் என கருதுகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் என்று இல்லாமல் அனைத்து பார்மெட்டும் இதில் அடங்கும். இத்தனை ஆண்டுகளாக ஒரு அணியாக பல்வேறு சூழல்களிலிருந்து நாங்கள் அதிகம் கற்றுள்ளோம். களத்தில் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம். எங்களது ஆட்டம் என்ன என ஒவ்வொருவரும் அறிவோம்.
அதிக வயதுள்ள வீரர்கள் கொண்ட அணி என்ற காலம் நிச்சயம் வரும். ஆனால், அதை நாங்கள் இன்னும் எட்டவில்லை என கருதுகிறேன்” என ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை எட்ட இன்னும் 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்ற வேண்டும்.