ஹோபர்ட்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக பேட் செய்து அசத்தி இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி இன்று ஹோபர்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. டிம் டேவிட் 74, ஸ்டாய்னிஸ் 65, மேத்யூ ஷார்ட் 26 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 3, வருண் 2 மற்றும் ஷிவம் துபே 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. அபிஷேக் சர்மா 25, ஷுப்மன் கில் 15, சூர்யகுமார் யாதவ் 24, அக்சர் படேல் 17, திலக் வர்மா 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஜிதேஷ் சர்மா 22 ரன்கள் எடுத்தார்.
18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்தியா. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்தத் தொடரை அடுத்த போட்டி வரும் வியாழக்கிழமை அன்று கோல்ட் கோஸ்ட்டில் நடைபெறுகிறது.