மும்பை: இந்திய ரசிகர்களை அமைதியாக்கும் திட்டத்தில் தங்கள் அணி வெற்றி பெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ல் இதே நவம்பரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்’ என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று விளையாடுகின்றன. இதை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் பங்கேற்றார்.
‘பார்வையாளர்களை அமைதி செய்ய உங்கள் திட்டம் என்ன?’ என செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு சிரித்தபடி பதிலளித்த லாரா வோல்வார்ட், “அதில் நாங்கள் வெல்வோம் என நம்புகிறோம். மைதானம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பார்வையாளர்கள் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். நிச்சயம் அது இந்திய அணிக்கு அழுத்தம் தரும். ஏனெனில், அவர்கள் வெற்றி பெற வேண்டும் என எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதுவே எங்களுக்கு கொஞ்சம் சாதகமாக அமையும் என நினைக்கிறேன்.
நிச்சயம் உலகக் கோப்பையை வெல்வது என்பது மகத்தானது. அது எங்கள் நாட்டில் மகளிர் கிரிக்கெட்டுக்கு ஊக்கம் தரும்” என தெரிவித்தார்.
மழை காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்து வீசுகிறது.