விளையாட்டு

மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்: மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி - IND vs SA

வேட்டையன்

மும்பை: நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்த போட்டி நடைபெறும் நவி மும்பையில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இந்தப் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட நேர அட்டவணையின் படி பிற்பகல் 3 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இருந்தபோதும் 2.43 மணி அளவில் நவி மும்பையில் மீண்டும் மழை பொழிவு அதிகரித்தது. பின்னர் போட்டியின் மூன்று நடுவர்கள் மற்றும் ஆடுகள பரமரிப்பாளர் உடன் கலந்து பேசினார். ஆட்டம் தொடங்க முடியாத சூழல் இருந்ததால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டது.

மழை பொழிவு நின்று மாலை 5 மணிக்குள் ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் போட்டி முழுவதுமான இன்று நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் ரிசர்வ் நாளான நாளைய தினம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மழை மற்றும் ஆடுகள சூழலைக் கருத்தில் கொண்டு இப்போது இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமான ஒன்றாக அமையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT