விளையாட்டு

உள்நாட்டு போரும், இலங்கையின் வெற்றிக் கோப்பையும் - 1996 உலகக் கோப்பை | பூவா தலையா 2

Ellusamy Karthik

கடந்த 1996 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அர்ஜுனா ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்த தொடர் இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது. உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை மக்களுக்கு இந்த வெற்றி சற்று மகிழ்ச்சியுடன் இளைப்பாற செய்த காலம் அது.

12 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் இரு பிரிவுகளாக (தலா 6 அணிகள்) லீக் சுற்றில் விளையாடின. ‘குரூப் - ஏ’வில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே மற்றும் கென்யா அணிகள் இடம்பெற்றன. இதில் இலங்கை அணி இந்தியா, கென்யா, ஜிம்பாப்வே அணிகளை வீழ்த்தி இருந்தது. இந்த தொடரில் இலங்கை விளையாடிய போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தரமான வீரர்களை இலங்கை அணி கொண்டிருந்தது.

சனத் ஜெயசூர்யா, அரவிந்தா டி சில்வா, அர்ஜுனா ரணதுங்கா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றிருந்த அணி. முதல் 15 ஓவர்களில் பேட்டிங்கில் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர் இலங்கை அணியின் ஓப்பனர்கள் ஜெயசூர்யாவும், கலுவிதாரனேவும். இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை செலுத்திய ஆதிக்கத்தின் தொடக்கப்புள்ளி. அதன் பின்னர் 2007, 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது. 2014 டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

இலங்கையில் கிரிக்கெட்: பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது தீவு தேசமான இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமானதாக வரலாற்று தகவல். 1965-ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அசோசியேட் உறுப்பினர் என்ற அந்தஸ்தை பெற்றது இலங்கை (அப்போது சிலோன்). அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் உயர்மட்ட அளவில் விளையாடும் வாய்ப்பை பெற்றது இலங்கை. 1981-ல் டெஸ்ட் கிரிக்கெட் அங்கீகாரத்தையும் இலங்கை பெற்றது. அங்கிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் கற்று தேர்ந்த இலங்கை அணி 1996-ல் உலக சாம்பியன் ஆனது.

உள்நாட்டு போர்: இலங்கையில் உள்நாட்டு போர் காரணமாக அசாதாரண சூழல் நிலவியது. இலங்கை அரசு தரப்புக்கும் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. அந்தச் சூழலில் உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு வெகு சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்திருந்த இலங்கை மத்திய வங்கியின் மீது ஜனவரி 31, 1996-ல் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது.

இலங்கை மத்திய வங்கி அமைந்திருந்த கட்டிடம் நோக்கி சுமார் 400 பவுண்ட் வெடிமருந்து ஏற்றப்பட்ட லாரியை செலுத்தி தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 91 பேர் உயிரிழந்தனர். சுமார் 1400-பேர் காயமடைந்தனர். இதில் அயல்நாடுகளை சேர்ந்தவர்களும் காயமடைந்தனர். விடுதலைப் புலிகள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என இலங்கை ராணுவம் முதலில் தெரிவித்தது. இலங்கையில் பொருளாதாரத்தை நொடிக்கச் செய்து, அந்நாட்டு ராணுவத்தை முடக்கும் நோக்கில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அப்போது பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சூழலில் அந்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் நடைபெறும் என அட்டவணை அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கொழும்புவில் 3 போட்டி மற்றும் கண்டியில் ஒரு போட்டி என 4 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த 4 போட்டியிலும் இலங்கை உடன் ஆஸ்திரேலியா, கென்யா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாடும் என தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணமாக இலங்கையில் விளையாட ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் மறுத்துவிட்டன. இறுதிவரை பேசியும் அதில் உடன்பாடு ஏற்கப்படவில்லை. அதனால் இலங்கை அணி தொடரில் விளையாடுவதற்கு முன்பாகவே காலிறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுவிட்டது.

கிரிக்கெட் உலகில் போட்டிகளை அணிகள் புறக்கணிப்பது என்பது மிகவும் அரிதானது. அரசியல் அசாதாரண சூழல், பாதுகாப்பு காரணங்கள் மற்றும் வீரர்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உள்ளிட்டவற்றால் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறாமல் போவது உண்டு. அதில் ஒன்றாக இலங்கையில் திட்டமிடப்பட்ட போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ஆஸ்திரேலியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் புறக்கணித்தன.

இலங்கையில் சர்வதேச அணிகள் பாதுகாப்பாக கிரிக்கெட் விளையாடலாம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பிப்ரவரி 13, 1996-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ‘வில்ஸ் லெவன்’ என ஒரே அணியாக இணைந்து இலங்கை உடன் விளையாடினர். இதில் சச்சின் டென்டுல்கர், சயீத் அன்வர், அமீர் சோஹைல், முகமது அசாருதீன், இஜாஸ் அகமது, அஜய் ஜடேஜா, ரஷீத் லத்தீஃப், வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், கும்ப்ளே, ஆஷிஷ் ராகேஷ் கபூர் ஆகியோர் விளையாடி இருந்தனர். இந்த போட்டிக்கு பிறகும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் நிர்வாகம் இலங்கையில் விளையாட மறுத்துவிட்டது. இதனால் இரண்டிலும் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, புள்ளிகளையும் வழங்கியது ஐசிசி. இருப்பினும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா இறுதிக்கும் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி காலிறுதிக்கும் முன்னேறி இருந்தன.

விடுதலைப் புலிகளும் கிரிக்கெட்டும்: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான ‘800’ திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் விடுதலைப் புலிகளுடன் அவர் உணவருந்துவார். ‘நாங்கள் எல்லோரும் கபில் தேவுக்கும், கவாஸ்கருக்கும் தான் சப்போர்ட் செய்து வந்தோம். அதுவும் முரளிதரன் எனும் ஒருத்தன் வரும் வரைக்கும். இப்போ நிறைய தமிழ் சனம் உங்களுக்காக கிரிக்கெட் பார்க்கிறார்கள்’ என புலிகள் தரப்பில் ஒருவர் சொல்வது போன்ற வசனம் வரும். அது படத்தில் வருகின்ற வசனம் தான் என்றாலும் விடுதலைப் புலிகளின் கிரிக்கெட் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது என்றும் சொல்லலாம்.

கடந்த 2007-ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்ததாவது: “எங்கள் தலைவர் (பிரபாகரன்) தனது பணியில் எப்போதும் பிஸியாக இருப்பார். அவர் விளையாட்டு போட்டிகளை பார்ப்பார். ஆனால், அது வெகு சில மணித்துளிகள் என்றுதான் இருக்கும். அவர் விளையாட்டு பிரியர். கிரிக்கெட்டும் பார்ப்பார். தடகளம், கால்பந்தில் ஆர்வம் அதிகம்” என்றார். அப்போது இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் (2007) விளையாடி இருந்தது.

1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களும், புலிகளும் வனப்பகுதியில் பார்த்ததாக தகவல். அப்போது இலங்கை அரசு மற்றும் புலிகளுக்கு இடையிலான மோதல் தரைவழி தாக்குதலாக இருந்தது. அதன் பின்னர் மோதல் தீவிரமடைந்து இரு தரப்பும் வான்வழி தாக்குதலும் மேற்கொண்டன. 2007-ல் அந்த சூழல் இல்லை என அப்போது வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 2007 உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற காலத்தில் இருதரப்பு தாக்குதல் காரணமாக இலங்கையில் இரவு நேர மின்வெட்டு சூழல் இருந்ததாகவும் தகவல்.

அரசியலும், விளையாட்டும் வேறு வேறு. இலங்கை வாழ் தமிழர்களும் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்திலும் அவர்களின் பங்கு இருந்தது என்கிறார் இலங்கையை சேர்ந்த பத்திரிகை ஆசிரியர் ந.வித்தியாதரன். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வசித்தவர்கள் கிரிக்கெட் மீது நாட்டம் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளுக்கும் பொருந்தும் என அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டு போருக்கு பிறகும் இலங்கையில் 2019-ல் ஈஸ்டர் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல், உள்நாட்டில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழல், பொருளாதார நெருக்கடி நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. இருப்பினும் அங்கு நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, மேற்கு இந்தியத் தீவுகள் உட்பட சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.

>>முந்தைய அத்தியாயம்: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’... 1983-ல் ஸ்ரீநகர் மைதானத்தில் ஒலித்த முழக்கம்

SCROLL FOR NEXT