பெங்களூரு: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய ‘ஏ’ அணி 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா ‘ஏ’ - தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய மைதானத்தில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 85.2 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய ‘ஏ’ அணி தரப்பில் தனுஷ் கோட்டியான் 4, மானவ் சுதர், குர்னூர் பிரார் ஆகியோர் தலா 2, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய ‘ஏ’ அணி 58 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய ‘ஏ’ தரப்பில் சாய் சுதர்ஷன் 32, ஆயுஷ் மாத்ரே 65, ஆயுஷ் பதோனி 38, கேப்டன் ரிஷப் பந்த் 17, தனுஷ் கோட்டியான் 13 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் வந்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் 75 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. 2-ம் நாள் ஆட்டநேர இறுதியில் அந்த அணி 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்துள்ளது. ஜோர்டன் ஹெர்மான் 12, லெசெகோ செனோக்வான் 9 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.