லியோனல் மெஸ்ஸி 
விளையாட்டு

உலகக்கோப்பையை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன் - லியோனல் மெஸ்ஸி

ஆர்.முத்துக்குமார்

இண்டர் மியாமி அணிக்காக கால்பந்து லீகில் ஆடி வரும் அர்ஜெண்டினாவின் கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக்கோப்பையை வென்று சாம்பியன் தகுதியைத் தக்க வைக்க கடவுள் தன்னை அனுமதிப்பார் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் 100% உடற்தகுதியுடன் இருந்தால் நாட்டுக்காக மீண்டும் ஒரு உலகக்கோப்பையில் ஆடி வென்று சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்கவே ஆவலாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

“ஆம்! உண்மை என்னவெனில் நான் உலகக்கோப்பையில் அர்ஜெண்டினா அணியை வழிநடத்தவே விரும்புகிறேன். உலகக்கோப்பையில் ஆடுவது என்பதே ஒரு அசாதாரண அனுபவம்தான். நான் அங்கு இருக்கவே விரும்புகிறேன். நான் நல்லபடியாக உடல் தகுதியைப் பாதுகாத்து என் தேசிய அணிக்கு உதவுவதையே விரும்புகிறேன்.

உடல் தகுதியைப் பொறுத்தவரை தினசரி அடிப்படையில்தான் நான் மதிப்பீடு செய்வேன். அடுத்த ஆண்டு பிரீ சீசன் ஆரம்பிக்கிறேன். நான் 100% உடல் தகுதியுடன் இருக்கிறேனா என்பதைப் பார்க்க வேண்டும். நான் உண்மையில் உலகக்கோப்பையில் ஆட ஆவலாக இருக்கிறேன். கடந்த உலகக்கோப்பையை வென்றோம் மீண்டும் ஆடி அதைத் தக்கவைப்பது என்பது பிரமாதமானதுதான்.

ஏனெனில் நம் நாட்டு அணிக்காக ஆடுவது என்பது ஒவ்வொரு முறையும் கனவுதான். குறிப்பாக உலகக்கோப்பை போன்ற ஃபிபா போட்டிகளில் ஆடுவது மிக முக்கியமானது. ஆகவே இன்னொரு முறை உலகக்கோப்பையை வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என்று நம்புகிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். நான் எனக்கு நேர்மையாக இருக்கிறேன். நான் நல்லபடியாக உணரும் போது மகிழ்ச்சியுடன் ஆடுவேன். அப்படி இல்லாத போது உள்ளபடியே நல்ல நேரத்தை நான் களத்தில் அனுபவிப்பதில்லை. எனவே நல்ல நிலையில் இல்லை என்றால் நான் அங்கு செல்ல மாட்டேன்.

எனவே பார்ப்போம், பொறுத்திருந்து முடிவெடுப்போம். முதலில் இந்த சீசனை முடிக்கிறேன். பிறகு பிரீ சீசன். அதன் பிறகு 6 மாத காலம் உலகக்கோப்பைக்கு இருக்கிறது. ஆகவே பார்ப்போம். நல்ல பிரீ சீசன் அமைந்தால் நிச்சயம் பாசிட்டிவ் ஆக முடிவெடுப்பேன்.” என்றார் லியோனல் மெஸ்ஸி.

SCROLL FOR NEXT