சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரின் பிளாட்டினம் ஸ்பான்சராக பஜாஜ் குழுமம் இணைந்துள்ளது. மேலும் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரங்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திட்டத்தை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.
இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், பஜாஜ் ஃபின்செர்வ்– ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் பஜாஜ், பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான குரோஷியாவின் டோனா வெகிக், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தி நெக்ஸ்ட் லெவல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தேர்வு செய்யும் 10 வீரர், வீராங்கனைகளுக்கு பஜாஜ் குழுமம், பயிற்சி, வழிகாட்டல் மற்றும் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கி கொடுக்கும். பயிற்சி முகாம்கள், டென்னிஸ் உபகரணங்கள் மற்றும் பயண செலவுகள் ஆகிய அனைத்துக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஸ்பான்சர்ஷிப் முழுமையாக நிதி உதவியை வழங்கும்.