புதுடெல்லி: 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டண் வீராங்கனை பி.வி.சிந்து, காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைவதில் கவனம் செலுத்தும் வகையில் 2025-ம் ஆண்டு சீசனின் எஞ்சிய தொடர்களில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக பி.வி.சிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது பயிற்சி குழுவுடன் நெருக்கமாக கலந்தாலோசித்த பிறகும், டாக்டர் பர்திவாலாவின் வழிகாட்டுதலுடனும், 2025-ம் ஆண்டில் மீதமுள்ள அனைத்து பிடபிள்யூஎஃப் டூர் தொடர்களிலிருந்தும் நான் விலகுவது சிறந்தது என்று நாங்கள் உணர்ந்தோம்.
ஐரோப்பிய தொடர் தொடங்க உள்ள நிலையில் எனக்கு காலில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடையவில்லை. காயங்கள் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் பயணத்திலும் பிரிக்க முடியாத பகுதியாகும். அவை மீள்தன்மை மற்றும் பொறுமையை சோதிக்கின்றன, ஆனால் அவை மீண்டும் வலுவாக வருவதற்கான உத்வேகத்தையும் தூண்டுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.