ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமான பிரித்வி ஷா சர்ச்சைகள், மனவேற்றுமைகள் என்று அனைத்து எதிர்மறை விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளி இப்போது முழுவதும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி மீண்டும் இந்திய அணிக்குள் நுழையும் வாய்ப்பை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளார்.
சண்டிகாரில் நடைபெற்ற ரஞ்சி போட்டியில் சண்டிகர் அணிக்கு எதிராக பிரித்வி ஷா 72 பந்துகளில் சதம் கண்டார். இது ரஞ்சி வரலாற்றில் 6வது அதிவேக சதமாகும். மகாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 313 ரன்கள் எடுத்தது, இதில் பிரிதிவி ஷா 8 ரன்களில் ஜக்ஜீத் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் எந்த ஒரு வடிவத்தின் தேர்வு ராடாரிலிருந்தும் விலக்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமாக ஆடி 116 ரன்களை 163 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் அடித்தார்.
மகாராஷ்டிரா முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்குச் சுருண்டது. மகாராஷ்ட்ராவின் இடது கை ஸ்பின்னர் விக்கி ஆஸ்வால் பந்து வீச்சில் 6 விக்கெட்டுகளை அவரிடம் கொடுத்து சண்டிகர் 209 ரன்களுக்குச் சுருண்டு 104 ரன்கள் முன்னிலையை மகாராஷ்டிராவுக்கு வழங்கியது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சில் களம் கண்ட மகாராஷ்ட்ரா பிரித்வி ஷாவின் அதிரடி சதம் மூலம் இப்போது 174/1 என்று வலுவான நிலையில் உள்ளது பிரித்வி ஷா 79 பந்துகளில் 110 ரன்களுடன் ஆடி வருகிறார்.
இவர் 72 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் சதம் கண்டார். சச்சின் டெண்டுல்கரின் பிரியத்திற்குரிய இளம் வீரராகக் கரியரைத் தொடங்கி அறிமுக டெஸ்ட்டிலேயே சதம் கண்டு பிரகாசமாகத் தொடங்கிய அவரது இந்திய கிரிக்கெட் வாழ்க்கை கட்டுக்கோப்பின்மை, சொற்பேச்சுக் கேளாமை, ஒழுக்கமின்மை போன்ற காரணங்களினால் இருளுக்குள் சென்றது.
இந்த ரஞ்சியிலும் கூட கேரளாவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடிய போது டக் அவுட் ஆனார். ஆனால் 2வது இன்னிங்ஸில் 72 ரன்களை அடித்து அசத்தினார், இப்போது அவரது சதம் நீண்ட காலத்திய அவரது சத வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கடைசியாக மும்பைக்காக ஆடும்போது கடந்த பிப்ரவரி 2024-ல் சதம் அடித்ததோடு சரி.
ஒரு கட்டத்தில் மும்பை அணியிலிருந்தே ஒழுங்கு நடவடிக்கையினால் ட்ராப் செய்யப்பட்டார். பிறகுதான் இவர் மகாராஷ்ட்ராவுக்கு ஆட ஆட்சேபணையின்மை சான்றிதழை மும்பை நிர்வாகம் வழங்கியது. ரஞ்சி டிராபியில் இவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 379 ரன்கள், இதனை அசாமுக்கு எதிராக 2023ம் ஆண்டில் அடித்தார். 379 ரன்களை 383 பந்துகளில் விளாசியது குறிப்பிடத்தக்கது.
இப்போது இந்திய அணிக்குள் மீண்டும் நுழைய போராடி வருகிறார். இவருக்குக் கூட வாய்ப்புக் கிடைத்து விடும் சர்பராஸ் கான் தான் பரிதாபத்தின் உச்சம்.