பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்களில் பல்வேறு ஆடுகளங்கள் (பிட்ச்) அமைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என தெரியுமா?
கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் பிரதான ஆடுகளத்தை தவிர அருகருகே மேலும் சில ஆடுகளங்கள் தயார் செய்யப்பட்டிருக்கும். இதற்கு முக்கிய காரணம் ஒரு போட்டி தொடங்குவதற்கு முன்னர் அதற்காகவே தயார் செய்யப்பட்டு வைத்திருக்கும் ஆடுகளத்தில் வீரர்கள் பயிற்சி பெற அனுமதிக்கமாட்டார்கள்.
ஏனெனில் ஒவ்வொரு ஆடுகளத்தையும் தயார் செய்வதற்கு பல நாட்கள் ஆகும். அது மட்டும் அல்லாமல் அந்த ஆடுகளத்தில் பயிற்சி செய்தால் சேதம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அந்த ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இருக்கிறதா என போட்டி அதிகாரிகள் செய்த ஆய்வுகளுக்கு பலன் இல்லாமல் போய்விடும். அதற்காக அந்த போட்டியில் விளையாட வரும் அணி ஆடுகளத்தில் வலை பயிற்சி செய்யாமலும் இருக்க முடியாது.
இதனால் அந்த ஆடுகளத்தின் அருகே வேறு ஆடுகளங்கள் இருந்தால் அந்த வீரர்கள் வலை பயிற்சி மேற்கொள்ள உதவியாக இருக்கும். இந்த அடிப்படையிலேயே கூடுதலான ஆடுகளங்கள் தயார் செய்யப்படுகின்றன. எனினும் பிரதான ஆடுகளத்தில் இருந்து மற்ற ஆடுகளங்களின் தன்மை மாறுபட்டிருக்கும். இது பல்வேறு ஆடுகளங்களில் எவ்வாறு ரன்கள் சேர்க்க வேண்டும் என அனுபவத்தை வீரர்களுக்கு கொடுக்கும்.
சில நேரங்களில் போட்டி நடைபெறும் போது ஆடுகளத்தின் தன்மை மோசமான நிலைக்கு சென்று அந்த ஆடுகளம் விளையாடுவதற்கு தகுந்த வகையில் இல்லை என நடுவர்கள் கூறினால் வேறு ஒரு ஆடுகளத்தில் அந்த போட்டியை தொடரலாம். ஆனால் அதற்கு இரு அணிகளின் கேப்டன்களும் சம்மதம் தெரிவிக்க வேண்டும். மேலும் வானிலை காரணம், வெளிப்புற பிரச்சினைகள் காரணமாகவும் மாற்று ஆடுகளத்தை பயன்படுத்தலாம்.
எந்த வகையிலும் போட்டியை நடத்துவதில் தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மாற்று ஏற்பாடாக அருகில் கூடுதலாக ஆடுகளங்கள் தயார் செய்யப்படுகின்றன. மேலும் ஒரே ஆடுகளத்தில் அடுத்தடுத்து போட்டிகள் நடைபெறும் வகையில் திட்டமிடப்படும் அட்டவணைகளுக்காகவும் இந்த ஆடுகளங்கள் பயன்படும்.