சென்னை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. இது குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஸ்ரேயஸ் ஐயர் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அஸ்வினும் அதை பேசியுள்ளார்.
“ஸ்ரேயஸின் செயல்பாட்டை கொஞ்சம் பாருங்கள். அணியில் இருந்து வெளியேறிய நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் இடம்பிடித்து கோப்பையை வென்று கொடுத்தார். அவர் அப்படி என்ன தவறு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். பின்னர் ஏலத்துக்கு சென்றார். 2014-க்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். ஷார்ட் பால் சிக்கலை கடந்து வந்தார். பும்ரா மற்றும் ரபாடா ஆகியோரது பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டார்” என்று அஸ்வின் பேசியுள்ளார்.