விளையாட்டு

ராகுல் சதம்; பந்த், ஜடேஜா அரை சதம்: முதல் இன்னிங்ஸில் ரன்களை சமன் செய்த இந்தியா - ENG vs IND

செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்களை இந்தியா சமன் செய்தது. கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104, பிரைடன் கார்ஸ் 56, ஜேமி ஸ்மித் 51 ரன்கள் சேர்த்தனர்.

இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53, ரிஷப் பந்த் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.

பிரைடன் கார்ஸ் வீசிய 54-வது ஓவரின் கடைசி 3 பந்​துகளை​யும் பவுண்​டரிக்கு விரட்டி அசத்​தி​னார் கே.எல்​.​ராகுல். மறு​புறம் சீராக ரன்​கள் சேர்த்த ரிஷப் பந்த், பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரின் கடைசி பந்தை லெக் திசை​யில் சிக்​ஸர் விளாசி அரை சதம் கடந்​தார். இது அவரது 17-வது அரை சதமாக அமைந்தது.

சிறப்​பாக விளை​யாடி வந்த ரிஷப் பந்த் 112 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 8 பவுண்​டரி​களு​டன் 74 ரன்கள் எடுத்த நிலை​யில் ஷோயிப் பஷிர் பந்தை தட்​டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடி​னார். ஆனால் பந்தை விரை​வாக எடுத்து பென் ஸ்டோக்ஸ் அபார​மாக த்ரோ செய்ய ரிஷப் பந்த் ரன் அவுட் ஆனார். 4-வது விக்​கெட்டுக்கு ரிஷப் பந்த், கே.எல்​.​ராகுல் ஜோடி 198 பந்​துகளில் 141 ரன்கள் சேர்த்​தது. ரிஷப் பந்த்​தின் ரன் அவுட் இங்கிலாந்து அணிக்கு பெரிய திருப்​பு​முனையை கொடுத்​தது.

மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 65.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 248 ரன்​கள் எடுத்​தது. கே.எல்​.​ராகுல் 98 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். உணவு இடைவேளைக்கு பின்​னர் இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. நிதான​மாக விளை​யாடிய கே.எல்​.​ராகுல் 176 பந்​துகளில், 13 பவுண்​டரி​களு​டன் தனது 10-வது சதத்தை விளாசி​னார். 100 ரன்​கள் எடுத்த நிலை​யில் கே.எல்​.​ராகுல், ஷோயிப் பஷிர் வீசிய பந்தை டிரைவ் செய்ய முயன்ற போது பந்து மட்டை விளிம்​பில் பட்டு முதல் சிலிப் திசை​யில் நின்ற ஹாரி புரூக்​கிடம் கேட்ச் ஆனது.

இதன் பின்னர் களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய நிலையில் தனது ரன் கணக்கை 21-வது பந்தில்தான் தொடங்கினார். மறுமுனையில் ஜடேஜா சீராக ரன்கள் சேர்த்தார். நிதானமாக விளையாடிய நித்திஷ் குமார் ரெட்டி 91 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

119.2 ஓவர்களில் இந்திய அணி 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஜடேஜா 72, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, வாஷிங்டன் சுந்தர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு ஓவருக்கு அந்த 2 ரன்கள் எடுத்தது. களத்தில் பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராவ்லி உள்ளனர்.

100-ல் 100-வது அவுட்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 100 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 ரன்களில் பேட்ஸ்மேன் ஆட்டமிழப்பது இது 100-வது முறையாகும்.

SCROLL FOR NEXT