விளையாட்டு

இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகத் தெரியவந்ததைத் தொடர்ந்து இந்திய தடகள வீராங்கனை ட்விங்கிள் சவுத்ரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

28 வயதாகும் ட்விங்கிள் சவுத்ரி, இந்த ஆண்டு உத்தராகண்டில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியின் 4x400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார். மேலும் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்திலும் வெண்கலமும், 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் அவர் வென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாகக் கூறி தடகள ஒருங்கிணைப்புப் பிரிவு (ஏஐயு) அவரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டது. தடை செய்யப்பட்ட மெத்தில் டெஸ்டோஸ்டெரான் என்ற மருந்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.

சஸ்பெண்ட் உத்தரவைத் தொடர்ந்து, அவருக்கு ஏஐயு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணைக் குழு முன்பு ட்விங்கிள் சவுத்ரி ஆஜராகி தன்னிலை விளக்கத்தை அளிக்கவேண்டும் என்றும் ஏஐயு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் சேர்ந்த ட்விங்கிள் சவுத்ரி, கொச்சியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற 28-வது தேசிய பெடரேஷன் சீனியர் தடகளப் போட்டியின் 800 மீட்டர் பிரிவில் 2:00.71 வினாடிகளில் ஓடிவந்து முதலிடம் பிடித்தார். கடந்த மே மாதம் ஸ்னேகா கொல்லேரி என்ற இந்திய தடகள வீராங்கனை தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT