விளையாட்டு

மெஸ்ஸியின் ஃப்ரீ கிக் மாயம்: இன்டர் மியாமி வெற்றி @ Club World Cup

வேட்டையன்

அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் போர்டோ கிளப் அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வென்றுள்ளது இன்டர் மியாமி அணி. இந்த ஆட்டத்தில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, ஃப்ரீ கிக் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி அபார கோல் பதிவு செய்தார்.

அமெரிக்காவில் உள்ள அட்லான்டா நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கிளப் அணியான ‘போர்ட்டோ’ மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கிளப் அணியான ‘இன்டர் மியாமி’ அணிகள் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடின. இரு அணிகளும் ‘குரூப் -ஏ’வில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு அணிகளும் தொடரின் முதல் போட்டியை டிரா செய்தன. அதனால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இருந்தது.

ஆட்டத்தில் 8-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து முன்னிலை பெற்றது போர்ட்டோ. முதல் பாதி முழுவதும் 1-0 என்ற கணக்கில் போர்ட்டோ முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதி தொடங்கி 2 நிமிடங்கள் கடப்பதற்குள் பதில் கோலை பதிவு செய்தது இன்டர் மியாமி.

மெஸ்ஸி ஃப்ரீ கிக்: இந்த ஆட்டத்தில் 54-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார் மெஸ்ஸி. தனது இடது காலால் பந்தை மெஸ்ஸி ஸ்ட்ரைக் செய்தார். அது அப்படியே போர்ட்டோ அணி வீரர்களின் அரணை கடந்து கோல் கம்பத்தின் வலது மேல் பக்கமாக வலைக்குள் சென்றது. இது மெஸ்ஸியின் ட்ரேட்மார்க் பாணி ஆட்டம். இதை பலரும் கொண்டாடி வருகின்றனர். 37 வயதிலும் தனது ஆட்டத்திறனை மெஸ்ஸி நிரூபித்து வருகிறார் என அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். குரூப் சுற்றில் அடுத்த ஆட்டத்தில் இன்டர் மியாமி வெற்றி பெற்றால் ‘ரவுண்ட் ஆப் 16’ சுற்றுக்கு முன்னேறும்.

ஃபிபா கிளப் உலகக் கோப்பை: உலகின் 32 கிளப் அணிகள் ஃபிபா கிளப் உலகக் கோப்பை 2025 தொடரில் பங்கேற்றுள்ளன. அமெரிக்காவில் இந்த தொடர்ப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஜூலை 13 வரை நடைபெறுகிறது. மொத்த 8 பிரிவுகளாக இந்த 32 அணிகளும் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று நடைபெறுகிறது. தொடர்ந்து ரவுண்ட் ஆப் 16, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ரியல் மாட்ரிட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்றுள்ளது.



What a free kick from the goat at the FIFA Club World Cup. pic.twitter.com/EiAv4invb8

SCROLL FOR NEXT