சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான இலட்சினையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். அருகில் ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங். 
விளையாட்டு

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைக்கான இலட்சினை வெளியீடு!

செய்திப்பிரிவு

சென்னை: சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் எந்தெந்த பிரிவிலும் கலந்து கொள்ளும் என்பதற்கான ‘டிரா’ வெளியீடு வரும் 24-ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது.

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016-ல் லக்னோவிலும், 2021-ல் புவனேஷ்வரிலும் நடைபெற்றிருந்தது. இம்முறை அணிகளின் எண்ணிக்கை 16-ல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.64 கோடியை ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடருக்கான இலட்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் போலா நாத் சிங் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஏஸ்டிஏடி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT