விளையாட்டு

டிஎன்பிஎல் டி20: நிதிஷ் ராஜகோபால் அதிரடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் வெற்றி

பெ.மாரிமுத்து

கோயம்புத்தூர்: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி கோயம்புத்தூரில் உள்ள சிடிசிஏ ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (ஜூன் 8) பிற்பகலிலல் நடைபெற்றது.

இதில் சீகம் மதுரை பேந்தர்ஸ் மற்றும் எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனைத்தொடர்ந்து, களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதீக் உர் ரஹ்மான் 38 ரன்களும் (21 பந்துகள்), ராம் அர்விந்த் 37 ரன்களும் (34 பந்துகள்), என்.எஸ். சதுர்வேத் 32 ரன்களும் (26 பந்துகள்) எடுத்தனர்.

சேலம் ஸ்பார்டன்ஸ் பந்துவீச்சில் எம். முகமது 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், எஸ். அஜித் ராம் 3 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும், ராகுல் ஷா 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 18.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

சேலம் அணி சார்பில் நிதிஷ் ராஜகோபால் 41 பந்துகளில் 60 ரன்களும், ஆர். கவின் 39 பந்துகளில் 48* ரன்களும், ஆர். விவேக் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

மதுரை பேந்தர்ஸ் பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங் 3.4 ஓவர்களில் 28 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், முரளி அஸ்வின் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இறுதியில், எஸ்கேஎம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சேலம் ஸ்பார்டன்ஸ் அணியின் நிதிஷ் ராஜகோபால் தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT