விளையாட்டு

தலைப்பாகை, ஆர்சிபி ஜெர்ஸி அணிந்து மைதானம் வந்த கிறிஸ் கெயில் ஆதரவு யாருக்கு? - IPL Final

வேட்டையன்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண தலைப்பாகை, ஆர்சிபி ஜெர்ஸி அணிந்து வந்துள்ளார் கிறிஸ் கெயில். அவர் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்த ஆர்சிபி அணி, முதலில் பேட் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தை நேரில் காண நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் வந்துள்ளனர். இதில் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் ஆடிய கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் வந்துள்ளனர். இதில் ஆர்சிபி அணியை ஆதரிப்பதாக டிவில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

ஆனால், கெயில் தனது ஆதரவு எந்த அணிக்கு என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ளார். ஏனெனில், அவர் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். அதனால் இந்த இரு அணிகளும் விளையாடும் இறுதிப் போட்டியை காண பஞ்சாப் மக்களின் பாரம்பரிய மரபுகளில் ஒன்றான தலைப்பாகையை அணிந்துள்ளார். அதே நேரத்தில் ஆர்சிபி அணியின் ஜெர்ஸி மற்றும் காலணியையும் அணிந்து வந்துள்ளார். இந்த படங்களை இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

கிறிஸ் கெயில் @ ஐபிஎல்: ஆர்சிபி அணிக்காக 85 போட்டிகளில் விளையாடி 3,163 ரன்கள் எடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்காக 41 போட்டிகளில் 1,339 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்காகவும் 16 போட்டிகளில் விளையாடி 463 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் - 357, அதிகபட்ச ரன்கள் - 175, அதிவேக சதம் (30 பந்துகள்) உள்ளிட்ட சாதனைகளை கிறிஸ் கெயில் தன்வசம் வைத்துள்ளார். அவருக்கு ஆர்சிபி அணி ஹால் ஆப் ஃபேம் அங்கீகாரத்தை கடந்த 2022-ம் ஆண்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

A post shared by Chris Gayle

SCROLL FOR NEXT