கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 65-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 33-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நகட் நுயென்னுடன் மோதினார். 59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் ஸ்ரீகாந்த், பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவுடன் மோதுகிறார்.
டோமா ஜூனியர் போபோவ் தனது 2-வது சுற்றில் 21-13, 21-17 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரரான சதீஷ் குமார் கருணாகரன் 14-21, 16-21 என்ற செட் கணக்கில் கிறிஸ்டோ போபோவிடம் தோல்வி அடைந்தார்.
இந்தியாவின் முன்னணி வீரரான ஹெச்.எஸ்.பிரனாய் 9-21, 18-21 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் யுஷி தனகாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி 21-17, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் லியா பலெர்மோ, ஜூலியன் மாயோ ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.