புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்து 40 பந்துகளை 89 ரன்கள் எடுத்தார் கருண் நாயர். சுமார் 1077 நாட்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாடிய ஆட்டமாக இது அமைந்தது. அதுவும் இம்பேக்ட் வீரர்கள் களம் கண்டார். தாக்கம் கொடுத்தார்.
அவரது கிரிக்கெட் வாழ்வையும், வாய்ப்புக்காக ஏங்கி நின்ற அவரது எதிர்பார்ப்பையும் கடந்த 2019-ல் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஜெர்ஸி’ பட கதையின் நாயகன் கதாபாத்திரத்துடன் ஒப்பிடலாம். அந்த அளவுக்கு ஆட்டத்தை அவர் நேசிக்கிறார். அதன் வெளிப்பாடு தான் ‘Dear Cricket, give me one march Chance.’ என சமூக வலைதளத்தில் கடந்த 2022-ல் அவர் பதிவிட காரணம். இப்போது வாய்ப்பு பெற்றார், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இத்தனைக்கும் கடந்த 2016-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னை - சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 303* (நாட்-அவுட்) ரன்கள் எடுத்திருந்தார். சேவாக்கை அடுத்து இந்த சாதனையை படைத்த இந்திய வீரராக அறியப்படுகிறார். இருப்பினும் அவருக்கான வாய்ப்பு என்பது மறுக்கப்பட்டது.
அதற்காக அவர் துவண்டு விடவில்லை. ‘ஜெர்ஸி’ பட நாயகனை போலவே உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2024-25 உள்ளூர் கிரிக்கெட் சீசனில் விதர்பா அணிக்காக விளையாடிய அவர், விஜய் ஹசாரே டிராபி தொடரில் 5 இன்னிங்ஸில் 542 ரன்கள், ரஞ்சி டிராபி தொடரில் 16 இன்னிங்ஸில் 863 ரன்கள் எடுத்தார்.
கருண் நாயரின் உள்ளூர் கிரிக்கெட் செயல்பாடு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அவருக்கான வாய்ப்பை கொடுத்தது. கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அதன் பிறகு இப்போதுதான் ஐபிஎல் வாய்ப்பினை பெற்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய வேண்டுமென்ற குரல் ஒலித்தது. இருப்பினும் அது அப்போது நடக்கவில்லை. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் வாய்ப்பு மூலம் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கதவை தகர்க்க தொடங்கியுள்ளார் 33 வயதான கருண். இப்போதைக்கு இது ஆரம்பம் தான். இந்த சீசனில் அவருக்கு டெல்லி அணியில் விளையாடும் வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைத்தால் இன்னும் அதிகமாக தனது திறனை அவர் வெளிப்படுத்துவார் என நம்பப்படுகிறது.
நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் உடனான ஆட்டத்தில் கிரிக்கெட் உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா வீசிய ஒரே ஓவரில் 16 ரன்களை பவுண்டரி மூலம் கருண் ஸ்கோர் செய்திருந்தார். சான்ட்னர் வீசிய அபார டெலிவரியில் விக்கெட்டை இழந்தார். அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் டெல்லி வெற்றி பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது.