சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார். அவருக்கு மாற்றாக அணியை மீண்டும் மகேந்திர சிங் தோனி வழிநடத்த உள்ளார். இதை சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. இந்த நிலையில்தான் அந்த அணிக்கு சங்கடம் தரும் வகையில் ருதுராஜ் விலகல் அமைந்துள்ளது.
இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான ஆட்டத்தில் விளையாடிய போது வலது கை பகுதியில் ருதுராஜுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு முழங்கை பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல். இந்நிலையில் தான் ருதுராஜ் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார்.
சென்னை - சேப்பாக்கத்தில் நாளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடன் சிஎஸ்கே விளையாட உள்ளது. இந்த போட்டி முதல் சிஎஸ்கே-வை கேப்டனாக மீண்டும் தோனி வழிநடத்த உள்ளார். கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அணியை அவர் வழிநடத்தி இருந்தார். அப்போது சிஎஸ்கே பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை 235 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தி உள்ளார். அவர் தலைமையிலான சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2022 சீசனில் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகிய நிலையில் தோனி அணியை வழிநடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.