நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் ராகுல் திராவிட். இந்நிலையில், அவரை மனதார புகழ்ந்து பேசி உள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரரான ஜெய்ஸ்வால், 45 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார். 3 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இந்த சீசனின் தொடக்கத்தில் ரன் சேர்க்க தடுமாறிய அவர், இந்த இன்னிங்ஸ் மூலம் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், ராகுல் திராவிட குறித்து அவர் தெரிவித்துள்ளது:
“எங்கள் அணியில் ராகுல் திராவிட் சார் இருப்பது எங்களது பாக்கியம். அவர் உன்னதமான மனிதர். சிறந்த தலைமை பண்பு கொண்டவர். அணியில் உள்ள எல்லோரிடத்திலும் அக்கறை காட்டுவார், ஆதரவு கொடுப்பார். வீரர்களுக்கு அதிக ஊக்கம் தருவார். அது எப்படி இருக்கும் என்றால் அந்த வீரர் சரியான இடத்தில், சரியான வழிகாட்டுதல் உடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இருக்கும். தனிப்பட்ட முறையில் வீரர்கள் மற்றும் அணி என அனைத்திலும் கவனம் செலுத்துவார்.
அவருடன் அருகில் இருக்கும் போது கிரிக்கெட் மட்டுமல்லாது களத்துக்கு வெளியில் இருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். மொத்தத்தில் அவர் அற்புதமானவர்” என ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ராகுல் திராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த போதும், தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ள போதும் அவரது வழிகாட்டுதலை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.