விசாகப்பட்டினம்: நடப்பு ஐபிஎல் சீசனின் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. இது டெல்லி அணிக்கு இந்த சீசனில் இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. பவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்தது அந்த அணி. அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நித்திஷ் ரெட்டி, ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
கிளாஸன் மற்றும் அனிகேத் வர்மா இணைந்து 77 ரன்கள் கூட்டணி அமைத்தனர். அதன் பின்னர் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமல் அந்த அணி தடுமாறியது. கிளாஸன் 32 ரன்கள், அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார். 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டெல்லி தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஸ்டார்க். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி கேபிடல்ஸ் அணி விரட்டியது. டூ பிளெஸ்ஸிஸ், ஜேக் பிரேசர் மெக்கர்க் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூ பிளெஸ்ஸிஸ், 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஜேக் பிரேசர் மெக்கர்க், 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் 34, ஸ்டப்ஸ் 21, கே.எல்.ராகுல் 15 ரன்கள் எடுத்தனர். 16 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து டெல்லி வெற்றி பெற்றது. ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருதை வென்றார். நடப்பு சீசனில் இரண்டு ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது டெல்லி கேபிடல்ஸ்.