குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் ஒரே மைதானத்தில் ஐபிஎல் தொடர்களில் 1,000 ரன்களை விரைவு கதியில் குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஷுப்மன் கில் 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்களை எடுத்தபோது இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் ஒரே மைதானத்தில் 1,000 ரன்களை ஷுப்மன் கில் 20 இன்னிங்ஸ்களில் எடுத்துள்ளார். இந்த வகைச் சாதனையில் முதன்மையாகத் திகழ்பவர் கிறிஸ் கெய்ல். இவர் சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூருவில் 19 இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களைக் கடந்து சென்றார். கடைசியாக 1,561 ரன்களை பெங்களூருவில் 41.07 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் சின்னசாமி ஸ்டேடியத்தில் 3 சதங்களை விளாசியுள்ளார். இதில் 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக எடுத்த ஆகச்சிறந்த ஐபிஎல் அதிரடி இன்னிங்ஸ் ஆன 175 ரன்களும் அடங்கும்
ஷுப்மன் கில்லும் 60.23 என்ற சராசரியில் அகமதாபாத் ஸ்டேடியத்தில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 160.25.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஷுப்மன் கில்லை இந்த மைதானத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. அடித்த மொத்த 890 ரன்களில் 572 ரன்களை அகமதாபாத்திலேயே எடுத்துள்ளார். இங்கு அவர் 2 சதங்களை எடுத்துள்ளார். இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எடுத்த அவரது மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆன 129 ரன்களும் அடங்கும்.
ஹைதராபாத் மைதானத்தில் டேவிட் வார்னர் 1623 ரன்களை 64.92 சராசரியில் எடுத்துள்ளார். ஆனால், இவர் எடுத்தது 22 இன்னிங்ஸ்களில் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷ் 1,064 ரன்களை பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் எடுத்துள்ளார். அதேபோல் சூரியகுமார் யாதவ் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 1,083 ரன்களைக் குவித்துள்ளார். ஐபிஎல் 2024-ல் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளாசிய 102 ரன்களின் போது இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.