ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றாலும், சென்னைக்கு எதிராக பெரிய சவாலை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஷேன் வாட்சன் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் கூறியதாவது: சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது ஆர்சிபிக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். இதற்கு காரணம் சிஎஸ்கே வசம் உள்ள தரமான பந்துவீச்சாளர்கள்தான். சிஎஸ்கேவின் பலத்தை எதிர்கொள்ள ஆர்சிபி தங்கள் அணி சேர்க்கையை சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆனால் தவறாக நினைக்க வேண்டாம், சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டையாக உள்ளது.
சிஎஸ்கே அணியின் முழு அமைப்பும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறந்து விளங்குவதைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா, நூர் அகமது ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். மீண்டும் அவர்கள், இந்த ஆடுகளத்தில் உதவிகரமாக இருப்பார்கள்.
சிஎஸ்கேவுக்காக தனது முதல் ஆட்டத்தில் நூர் அகமது தாக்கத்தை ஏற்படுத்தினார். இது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். விக்கெட்கள் வீழ்த்தும் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அணியில் இருப்பது அவர்களுக்கு கூடுதல் சிறப்பம்சம். இவ்வாறு ஷேன் வாட்சன் கூறினார்.