ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குவாஹாட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 152 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க வீரரான குயிண்டன் டி காக் 61 பந்துகளில், 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். ஆட்ட நாயகன் விருதை வென்ற டி காக் கூறியதாவது:
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதுபோன்ற சந்தர்ப்பத்தைப் பெற்று அணிக்கு வெற்றி தேடித் தந்ததை மறக்க முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எனக்கு எந்த சவாலும் ஏற்பட்டதாக உணரவில்லை.
பயிற்சி ஆட்டங்கள், 10 நாள் பயிற்சி முகாமுக்குப் பிறகு எனக்கு ஆட்டம் எளிதாக மாறியது. இந்த ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை எடுத்ததற்கு பயிற்சி ஆட்டங்கள் உதவின. ஐபிஎல் போட்டி என்றாலே மிகப்பெரிய ஸ்கோர் இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முயற்சி செய்தேன். ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடினேன். இவ்வாறு குயிண்டன் டி காக் தெரிவித்தார்.