அகமதாபாத்: கடந்த செப்டம்பரில் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார் இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் முஷீர் கான். தற்போது காயத்தில் இருந்து மீண்டு கிரிக்கெட் களத்துக்கு திரும்பி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இந்நிலையில், தனது மீட்சியை ‘மறுவாழ்வு’ என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
20 வயதான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். விபத்து காரணமாக உள்ளூர் கிரிக்கெட் தொடரில் அவரால் கடந்த ஆறு மாதங்கள் விளையாட முடியவில்லை. இரானி கோப்பை தொடரில் விளையாட சென்ற போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது. கடந்த 2024-ல் இளையோர் 19 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்காக விளையாடி இருந்தார்.
“விபத்துக்கு பிறகு என்னால் கழுத்தை அசைக்க கூட முடியவில்லை. படுத்த படுக்கையாக கிடந்தேன். கிரிக்கெட் விளையாட முடியுமா என கேட்க கூட முடியாது. ஆனால், வீட்டில் அப்பா, சகோதரர்களுடன் கிரிக்கெட் குறித்து மட்டுமே பேசுவோம். அந்த சூழலிலும் என் உலகம் கிரிக்கெட்டை சுற்றி இருந்தது.
ரஞ்சி டிராபி, இரானி கோப்பை தொடர், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் போன்றவற்றை தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்பா மற்றும் சகோதரர் மொயீன் உடன் ஆட்டம் குறித்து விவாதிப்பேன். நான் களத்துக்கு திரும்ப பொறுமை மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த காலம் அது. தொடக்கத்தில் மொத்த சீசனையும் மிஸ் செய்ததை எண்ணி வருந்தினேன். ஆனால், நடந்ததை நான் ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது.
இப்போது காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் களத்துக்கு திரும்பியது மகிழ்ச்சி. எனக்கு இது மறுவாழ்வு. மெல்ல மெல்ல எனது பயிற்சியை தொடங்கினேன். பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைவதற்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினேன். என்னால் பழையபடி செயல்பட முடிகிறதா என நானே சோதித்து பார்த்தேன். நான் இப்போது நன்றாக பந்தும் வீசுகிறேன்.
என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஊக்கம் தருகிறார். அவரது ஃபுல்-ஷாட் குறித்து பேசினேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் இது எனது முதல் ஆண்டு. எனது வாய்ப்புக்காக காத்திருப்பேன். பேட்டிங், பவுலிங் என அணிக்கு பங்களிப்பு வழங்க நான் தயார்” என முஷீர் கான் கூறியுள்ளார். இவரது சகோதரர் சர்பராஸ் கான் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவரது தந்தை நவுஷத் கிரிக்கெட் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.