சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் போட்டிகளுக்கான வர்ணனை தமிழ் உட்பட 12 மொழிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோஸ்டாரில் சுமார் 170 வல்லுநர்கள் போட்டிகளை வர்ணனை செய்ய உள்ளனர். உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்களும் போட்டியை வர்ணனை செய்கின்றனர்.
18-வது ஐபிஎல் சீசன் நேற்று (மார்ச் 22) தொடங்கியது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜாஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
தொலைக்காட்சி வர்ணனையை பொறுத்தவரையில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் வர்ணனை உடன் ஒளிபரப்பாகிறது. டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கை பொறுத்தவரையில் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ஹரியான்வி, பெங்காலி, போஜ்புரி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.
இதோடு பார்வையாளர்களை கவரும் வகையில் மல்டி-கேமரா ஃபீட், ஹேங்அவுட் ஃபீட் போன்றவையும் டிஜிட்டல் ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழில் முரளி விஜய், எல்.பாலாஜி, பத்ரிநாத், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சடகோப்பன் ரமேஷ், ஸ்ரீதர், அனிருத் ஸ்ரீகாந்த், யோ மகேஷ், பாபா அபராஜித், பாபா இந்திரஜித், திருஷ் காமினி, அருண் கார்த்திக், கோபிநாத், முத்து, அஷ்வத் போபோ, நானி, கவுதம் டி, பாவனா, சமீனா, அபினவ் முகுந்த் ஆகியோர் வர்ணனை பணியை கவனிக்கின்றனர். நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளை வர்ணனை செய்ய உள்ளார்.