விளையாட்டு

ஐபிஎல் 2025 சுவாரஸ்யங்கள்: 7 புதிய கேப்டன்கள் முதல் 13 வயது பையன் வரை!

செய்திப்பிரிவு

18-வது ஐபிஎல் சீசன் இன்று (மார்ச் 22) கோலாகலமாக தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த சீசனின் சுவாரஸ்யங்கள் குறித்து பார்க்கலாம்.

7 புதிய கேப்டன்கள்: ரஜத் பட்டிதார் (பெங்களூரு), ரியான் பராக் (ராஜஸ்தான்), அக்சர் படேல் (டெல்லி), அஜிங்க்ய ரஹானே (கொல்கத்தா), ரிஷப் பந்த் (லக்னோ), ஸ்ரேயஸ் ஐயர் (பஞ்சாப்), சூர்யகுமார் யாதவ் (மும்பை) ஆகியோர் இந்த சீசனில் புதிய கேப்டன்களாக களமிறங்குகின்றனர். இதில் சூர்யகுமார் யாதவ், சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு மட்டும் கேப்டனாக செயல்பட உள்ளார். அதேபோன்று ரியான் பராக், ராஜஸ்தான் அணியின் முதல் 3 ஆட்டங்களுக்கு மட்டும் அணியை வழிநடத்த உள்ளார்.

‘அமலாகும் புதிய விதிகள்’: பந்தை பளபளப்பாக்குவதற்கு உமிழ்நீரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி. உயரமாக வீசப்படும் வைடு, ஆஃப் சைடு வைடு ஆகியவற்றுக்கு டிஆர்எஸ் அறிமுகம். பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் 2-வது இன்னிங்ஸில் 11-வது ஓவரில் இருந்து புதிய பந்தை பயன்படுத்தலாம். எனினும் பிற்பகலில் நடைபெறும் போட்டிகளுக்கு இது பொருந்தாது. இம்பாக்ட் பிளேயர் விதி அப்படியே தொடர்கிறது.

‘ரோ-கோ’: ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன்முறையாக இந்த வடிவிலான போட்டியில் விளையாடுகின்றனர். கடந்த சீசனில் விராட் கோலி 741 ரன்கள் குவித்திருந்தார். அதேவேளையில் ரோஹித் சர்மாவுக்கு அந்த சீசன் சரியாக அமையவில்லை. ஆனால் இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது மேஜிக்கை மீண்டும் கண்டுபிடிக்க ரோஹித் சர்மா முயற்சிப்பார்.

43 வயதில் மிரட்டல்: 43 வயதான எம்.எஸ்.தோனி இம்முறை முழு உடற்தகுதியுடன் விளையாடுகிறார். பயிற்சிகளில் அவர், சிக்ஸர் விளாசும் வீடியோக்கள் வெளியாகி அதிக கவனம் ஈர்த்தது. இம்முறை அவர், இறுதிக்கட்ட ஓவர்களில் தாக்குதல் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும் வழக்கம் போல அவரது கூர்மையான கிரிக்கெட் மூளை, களத்தில் பீல்டிங் அமைக்கும் வியூகம் அணிக்கு வலு சேர்க்கும்.

கவலை அளிக்கும் பும்ரா: மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ராவின் உடற்தகுதி பெரிய கேள்விக்குறியாக உள்ளது. பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு உடற்தகுதி பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மும்பை அணி மட்டும் அல்ல இந்திய அணியும் கவலை அடைந்துள்ளது.

‘13 வயது பையன்’: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அதிரடி பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷிக்கு 13 வயதுதான் ஆகிறது. ஆனால் பந்துகளை மைதானத்துக்கு வெளியே விளாசுவதில் கைதேர்ந்தவராக உள்ளார். எனினும் அவருக்கு எத்தனை போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.

SCROLL FOR NEXT