ஆக்லாந்து: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 205 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக விரட்டியது பாகிஸ்தான் அணி.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட் செய்த அணி 19.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக மார்க் சேப்மேன் 44 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தார். கேப்டன் பிரேஸ்வெல் 31 ரன்கள் எடுத்தார். ரன்கள் கொடுத்திருந்தாலும் இந்த தொடரின் முதல் முறையாக எதிரணியை பாகிஸ்தான் பவுலர்கள் ஆல் அவுட் செய்தனர்.
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இணையர். ஹாரிஸ், 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கேப்டன் சல்மான் அகா களம் கண்டார்.
ஹசன் நவாஸ் உடன் சேர்ந்து ஆட்டத்தில் அதிரடி காட்டினார் சல்மான் அகா. 44 பந்துகளில் சதம் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் 23 வயதான இளம் வீரர் ஹசன் நவாஸ். 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார் சல்மான் அகா. இருவரும் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இருப்பினும் முதல் இரண்டு போட்டிகளில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.