விளையாட்டு

ஐபிஎல் 2025-க்காக விதிமுறையில் தளர்வு!

ஆர்.முத்துக்குமார்

கரோனா தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது உமிழ்நீரைத் தடவி பிறகு காற்சட்டையில் தேய்த்து பளபளப்பைத் தக்க வைப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இப்போது ஐபிஎல் போட்டிகளுக்காக அந்தத் தடை நீக்கப்பட்டு உமிழ்நீரைப் பயன்படுத்தலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு முதன் முதலாகக் கரோனா காலகட்டத்தில், பந்து வீச்சாளர்கள் பந்தில் உமிழ்நீரை பயன்படுத்த ஐசிசி தடை விதித்தது. ஐசிசிக்கு ஒரு விதி என்றால் ஐபிஎல்-க்கு ஒரு விதி என்பது வழக்கமாகிப் போன நிலையில் ஐபிஎல்-க்காக விதிமுறை தளர்த்தப்பட்டு மீண்டும் பந்தின் பளபளப்பைத் தக்கவைக்க உமிழ்நீரை பயன்படுத்தலாம் என்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதே போல் இன்னொரு விதிமுறையும் அமலுக்கு வருகிறது, இதனால் பனிப்பொழிவில் பந்துகள் நழுவி பேட்டிங் செய்யும் அணிக்குச் சாதகமாகப் போட்டிகள் மாறுவதைத் தடுக்க இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து இதனால் பந்துகள் வீசுவதற்குக் கடினமாக இருக்கிறதா என்பதை நடுவர்கள் ஆய்வு செய்து வேறொரு பந்தை அதாவது 2-வது பந்தைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. அதாவது 10 ஓவர்கள் முடிந்த நிலையில் 11-வது ஓவரில் அந்த 2-வது பந்தை எடுக்க நடுவர்கள் முடிவெடுக்கலாம்.

உமிழ்நீரைப் பயன்படுத்த தடை நீக்கப்பட்டுள்ளதால் பவுலர்கள் குஷியாகியுள்ளனர். ஏனெனில், பந்துகள் தேய்ந்து இருக்கும் நிலையில் உமிழ்நீரால் ஒரு பக்கம் மட்டும் பளபளப்பு ஏற்றி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த முடிவினால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் ஐபிஎல் கேப்டன்கள் சந்திப்புக்குப் பிறகு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகமது சிராஜ் இந்த முடிவை வரவேற்றுக் கூறும்போது, “பவுலர்களுக்கு மிகவும் நல்லது. பந்து ஒன்றுமே ஆகாத போது உமிழ்நீரை பயன்படுத்தி பந்தில் பளபளப்பேற்றி ரிவர்ஸ் ஸ்விங் செய்ய முடியும்.” என்று மகிழ்ந்துள்ளார்.

சமீபத்தில் அனைத்துப் போட்டிகளுக்கும் உமிழ்நீரைப் பந்தில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று முகமது ஷமி ஐசிசியிடம் கோரிக்கை வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

அணிகள் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டால் (ஸ்லோ ஓவர்-ரேட்) அதன் காரணமாக சம்மந்தப்பட்ட அணியின் கேப்டன் ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்படும். தற்போது அதற்கு மாறாக சம்பந்தப்பட்ட அணியின் கேப்டனுக்கு டி-மெரிட் புள்ளிகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும். லெவல் 1, லெவல் 2 என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி அணியின் கேப்டன்கள் ஆட்டத்தில் விளையாட தடை என்பது கிடையாது. மேலும், அதிக உயரத்தில் எழும்பி வரும் பந்துகளை உயரம் காரணமாக Wide என்பதை டிஆர்எஸ் ரிவ்யூ மூலம் அணிகள் அறியலாம்.

SCROLL FOR NEXT