ஷில்லாங்: ஃபிபாவின் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மாலத்தீவை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி. இதன் மூலம் 15 மாதங்களாக வெற்றி பெறாமல் தவித்த இந்திய அணி அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
புதன்கிழமை அன்று மேகாலயாவின் ஷில்லாங் நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் ஓய்வு முடிவுக்கு விடை கொடுத்த சுனில் சேத்ரி விளையாடினார். சுமார் 286 நாட்களுக்கு பிறகு சர்வதேச கால்பந்து களத்துக்கு அவர் திரும்பி இருந்தார்.
இந்திய வீரர்கள் ராகுல் பெக்கே (34-வது நிமிடம்), லிஸ்டன் கோலாகோ (66-வது நிமிடம்) ஆகியோர் கோல் பதிவு செய்தனர். தொடர்ந்து 76-வது நிமிடத்தில் சுனில் சேத்ரி கோல் பதிவு செய்தார். இது அவரது 95-வது சர்வதேச கோல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பயிற்சியாளரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மனோலோ மார்க்வெஸிக்கும் முதல் வெற்றியாக அமைந்துள்ளது.
அடுத்ததாக வரும் 25-ம் தேதி ஆசிய கோப்பை 2027 தொடருக்கான தகுதி போட்டியில் வங்கதேச அணியுடன் இந்தியா விளையாட உள்ளது.