லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று லாகூரில் நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. தனது 5-வது சதத்தை விளாசிய ரச்சின் ரவீந்திரா 101 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்களும், கேன் வில்லியம்சன் 94 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்களும் விளாசி ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சனுக்கு இது 15-வது சதமாக அமைந்தது.
2-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் ஜோடி 154 பந்துகளில், 164 ரன்கள் சேர்த்திருந்தது. முன்னதாக தொடக்க வீரரான வில் யங் 21 ரன்னில் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்திருந்தார். இறுதிக் கட்டத்தில் டேரில் மிட்செல் 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் கிளென் பிலிப்ஸ் 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் விளாசினர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் லுங்கி நிகிடி 3, காகிசோ ரபாடா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
363 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்களே எடுக்க முடிந்தது. ராஸி வான்டெர் டஸ்ஸன் 69, கேப்டன் தெம்பா பவுமா 56, எய்டன் மார்க்ரம் 31, ரியான் ரிக்கெல்டன் 17 ரன்கள் சேர்த்தனர். ஹென்ரிச் கிளாசன் 3, வியான் முல்டர் 8, மார்கோ யான்சன் 3, கேசவ் மகாராஜ் 1, காகிசோ ரபாடா 16 ரன்களில் நடையை கட்டினர். கடைசி வரை தனிநபராக போராடிய டேவிட் மில்லர் 67 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். வரும் 9-ம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.