விளையாட்டு

சிந்துவின் அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி

செய்திப்பிரிவு

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது ஏமாற்றமளிக்கிறது. அதை மறந்துவிட்டு அடுத்து நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் தீவிரக் கவனம் செலுத்தவிருக்கிறேன் என இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சிந்து, அடுத்ததாக ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகளுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் கூறியதாவது:

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அதில் தங்கப் பதக்கம் வென்றிருக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். எனினும் வெண்கலப் பதக்கம் வென்றேன். இப்போது அதை மறந்துவிட்டு, வரக்கூடிய போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தை கோட்டைவிட்டது மிகக் கடினமான விஷயம்தான். ஏனெனில் நான் தங்கப் பதக்கம் வெல்வேன் என எல்லோருமே எதிர்பார்த்தார்கள். தங்கப் பதக்கம் வெல்ல முடியாமல் போகும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் இயல்பான ஒன்றுதான்.

அடுத்ததாக உலக சாம்பியன் ஷிப், ஆசிய விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. அந்தப் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன். அதற்காக விரைவில் பயிற்சியைத் தொடங்கவுள்ளேன். போட்டிக்கான கால அவகாசம் மிகக்குறைவாக உள்ளது. அதேநேரத்தில் தொடர்ச்சியாக போட்டிகள் உள்ளன. அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளுக்கு சிறப்பான முறையில் தயாராவேன் என நம்புகிறேன் என்றார்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்க வாய்ப்பை இழந்தது குறித்துப் பேசிய சிந்து, ‘எதிர்பார்ப்புகள் எப்போதுமே மிக அதிகமாக உள்ளன. ஆனால் அரையிறுதியின்போது சில அற்ப தவறுகளை செய்துவிட்டேன். மேலும் நான் கொஞ்சம் பதற்றத்தோடு இருந்ததும் தோல்விக்கு காரணம் ஆகும்.

உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக எனது ஆட்டத்திறனில் சில விஷயங்களை மேம்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன். எனது ஸ்டோக்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக நிறைய பயிற்சி பெற வேண்டும்’ என்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி தென் கொரியாவின் இன்சியானில் வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டி இந்த மாதக் கடைசியில் கோபன்ஹேகனில் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT