விளையாட்டு

சென்னையில் ‘WTT ஸ்டார் கன்டென்டர்’ டேபிள் டென்னிஸ் தொடர் - என்ன ஸ்பெஷல்?

செய்திப்பிரிவு

சென்னை: மார்ச் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் சென்னையில் WTT ஸ்டார் கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான போட்டிகள் அனைத்தும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கான இந்த தொடர் கோவாவில் நடைபெற்றது.

மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடப்பு ஆண்டுக்கான தொடரின் தகுதி சுற்று நடைபெறுகிறது. தொடர்ந்து 27-ம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்த தொடர் சென்னையில் நடைபெறுவது விளையாட்டு துறையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது இந்திய டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்களின் தரத்தை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் (Stupa Sports Analytics) மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) இணைந்து இந்த தொடரை ஒருங்கிணைத்துள்ளன. சர்வதேச தொடரான WTT ஸ்டார் கன்டென்டர் சென்னையில் முதன் முறையாக நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் என போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.2.38 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க வீரர்களாக திகழும் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோர் சென்னையை சேர்ந்தவர்கள். அவர்களை போலவே இன்னும் பல திறமையான இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களை உலகுக்கு இந்த தொடர் அறிமுகம் செய்யும் என நம்பப்படுகிறது.

இந்திய அளவில் நடைபெறும் தொழில்முறை டேபிள் டென்னிஸ் லீக்கான அல்டிமேட் டேபிள் டென்னிஸின் (யுடிடி) ஐந்தாவது பதிப்பை சென்னை நகரம் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்த நிலையில் WTT ஸ்டார் கன்டென்டர் தொடரும் சென்னையில் நடைபெறுகிறது. இதன் மூலம் சென்னை உலகளாவிய விளையாட்டு மையமாக மாற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே, செஸ் ஒலிம்பியாட், இரவு நேர சாலை கார் பந்தயம், சர்வதேச கிரிக்கெட் மற்றும் கால்பந்து, ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது.

WTT கன்டென்டர் போட்டியை இந்தியாவிற்கு கொண்டு வந்ததில் ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனர் தீபக் மாலிக் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரோடு இந்திய டேபிள் டென்னிஸ் நட்சத்திரம் சரத் கமலுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது.

இதுதொடர்பாக தீபக் மாலிக் தெரிவித்தது, “WTT ஸ்டார் கன்டென்டர் போட்டியை சென்னைக்கு கொண்டு வந்ததில் இந்தத் தொடரின் நம்பிக்கை வலுவாகி உள்ளது. ஸ்டூபா, அதன் பங்குதாரர்களுடன் சேர்ந்து, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை நடத்துவதன் மூலம் இந்தியாவில் டேபிள் டென்னிஸ் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சென்னை, இந்திய டேபிள் டென்னிஸுக்கு மிகவும் முக்கியமான ஒரு பிராந்தியமாக உள்ளது. இதனால் இங்கு போட்டியை நடத்துவது விளையாட்டை உயர்த்துவதற்கும் போட்டியின் உலகளாவிய அந்தஸ்தை மேம்படுத்துவதற்கும் உதவும்” என்றார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து தெரிவித்தது, “சென்னையில் WTT ஸ்டார் கன்டென்டர் போட்டியை நடத்துவது தமிழகத்துக்கு பெருமையான தருணம். மேலும், இது மாநிலத்தை இந்தியாவின் முதன்மையான விளையாட்டு இடமாக நிலைநிறுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த தொடர் நமது உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை காட்சிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விளையாட்டை ஒரு வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ள நமது இளைஞர்களை ஊக்குவிக்கும். உலகெங்கிலும் உள்ள வீரர்களை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நிகழ்வை ஒரு வெற்றிகரமானதாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.

இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் (டிடிஎஃப்ஐ) செயலாளர் கமலேஷ் மேத்தா கூறுகையில், “உலகளாவிய டேபிள் டென்னிஸ் மையமாக சென்னை உருவெடுத்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அர்ப்பணிப்பு WTT ஸ்டார் கன்டென்டர் போட்டியை நடத்துவதில் இந்தியாவின் வெற்றியை உருவாக்கி, விளையாட்டை மேலும் உயர்த்தும். உலகத்தரம் வாய்ந்த திறமைகளை அருகில் இருந்து பார்ப்பது அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும் மற்றும் இந்திய டேபிள் டென்னிஸுக்கு புதிய வரையறைகளை அமைக்கும்” என்றார்.

அல்டிமேட் டேபிள் டென்னிஸின் துணைத் தலைவர் ஏகன்ஷ் குப்தா கூறுகையில், “அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மற்றும் ஸ்டூபா இடையேயான பார்ட்னர்ஷிப் இந்திய டேபிள் டென்னிஸை மாற்றுவதற்கும், சிறந்த போட்டியைக் கொண்டுவருவதற்கும், இளம் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் கருவியாக உள்ளது. சென்னையில் WTT ஸ்டார் கன்டென்டர் போட்டி நடத்தப்படுவது விளையாட்டின் வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தி உள்ளது” என்றார்.

கடந்த 2021-ல் WTT ஸ்டார் கன்டென்டர் அறிமுகமானது. இதுவரை 13 பேர் பட்டம் வென்றுள்ளனர். 2025-ம் ஆண்டின் முதல் டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. இதில் ஜப்பானின் டொமோகாசு ஹரிமோடோ மற்றும் சீனாவின் குவாய் மேன் ஆகியோர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றனர்.

SCROLL FOR NEXT