விளையாட்டு

வில்லியம்சன், டேவன் கான்வே அதிரடி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி

செய்திப்பிரிவு

லாகூர்: முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூஸிலாந்து அணி.

லாகூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது. அறிமுக வீரரான மத்தேயு பிரீட்ஸ்கே 148 பந்துகளில், 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 150 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் 150 ரன்களை விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் மத்தேயு பிரீட்ஸ்கே.

இதற்கு முன்னர் 1978-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக மேற்கு இந்தியத் தீவுகளின் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 148 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த 47 வருட சாதனையை தற்போது முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் மத்தேயு பிரீட்ஸ்கே. மேலும் அறிமுக போட்டியில் சதம் விளாசிய 4-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதற்கு முன்னர் காலிங் இங்க்ராம், தெம்பா பவுமா, ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோரும் தங்களது அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் விளாசியிருந்தனர். வியான் முல்டர் 64, ஜேசன் ஸ்மித் 41, கேப்டன் தெம்பா பவுமா 20 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி சார்பில் மேட் ஹென்றி, வில் ஓ’ரூர்க் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

305 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி டேவன் கான்வே, கேன் வில்லியம்சன் ஆகியோரது அபாரமான ஆட்டத்தால் 48.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டேவன் கான்வே 107 பந்துகளில், 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஜூனியர் டலா பந்தில் ஆட்டமிழந்தார். தனது 13-வது சதத்தை விளாசிய கேன் வில்லியம்சன் 113 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டேவன் கான்வே, வில்லியம்சன் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது. இறுதிக்கட்டத்தில் கேன் வில்லியம்சனுக்கு உறுதுணையாக விளையாடிய கிளென் பிலிப்ஸ் 28 ரன்கள் சேர்த்தார். முன்னதாக வில் யங் 19, டேரில் மிட்செல் 10, டாம் லேதம் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் செனுரன் முத்துசாமி 2 விக்கெட்கள் கைப்பற்றினார். 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.

நாளை (12-ம் தேதி) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 14-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும்.

SCROLL FOR NEXT