கேன் வில்லியம்சன் & கிளென் பிலிப்ஸ் 
விளையாட்டு

வில்லியம்சன் சதம்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து - ODI Tri Series

செய்திப்பிரிவு

லாகூர்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சதம் விளாசினார். இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த தொடரின் இறுதிக்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்கேற்று விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்களில் வென்றது நியூஸிலாந்து. இந்நிலையில், தொடரின் இரண்டாவது போட்டி இன்று (பிப்.10) லாகூரில் கடாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்காவுடன் நியூஸிலாந்து விளையாடியது.

ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அறிமுக வீரர் மேத்யூ பிரெட்ஸ்கீ 148 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார்.

305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து விரட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான வில் யங் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களத்துக்கு வந்த கேன் வில்லியம்சன் மற்றும் கான்வே ஆகியோரின் வலது - இடது பேட்டிங் கூட்டணி 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கான்வே 107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மிட்செல் 10 ரன்கள் மற்றும் டாம் லேதம் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன் 113 பந்துகளில் 133 ரன்கள் எடுத்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 14-வது சதம் ஆகும். கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட அவர் இந்த தொடரில் தான் கம்பேக் கொடுத்திருந்தார். இந்த சூழலில் கடந்த போட்டியில் அரை சதம் விளாசிய நிலையில் தற்போது சதம் கண்டுள்ளார்.

48.4 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிளென் பிலிப்ஸ் 32 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வில்லியம்சன் வென்றார். இந்த தொடரின் அடுத்த போட்டி 12-ம் தேதி நடைபெறுகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அந்தப் போட்டியில் வெல்லும் அணி 14-ம் தேதி அன்று நியூஸிலாந்து உடன் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும்.

SCROLL FOR NEXT